..:::தூறல்:::..

பறவாயில்லை முகமூடியோடையே வரலாம் வாங்கோ...! நான் வாசித்தவை, யோசித்தவை, நினைவுகள், நிஜங்கள் என்பவற்றோடு..உங்கள் கருத்துக்களும் இங்கு தூறல்களாக...

Thursday 5 July 2007

"ஹலோ, ஆர் யூ ரமிழ்?"

"ஹலோ, ஆர் யூ ரமிழ்?"

பின்னால இருந்து வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தன். அதே தமிழ் ஆண்டி பொட்டு வைச்சு, நம்ம ஊரில் தலை பின்னுவது போல பின்னிக்கட்டி, கையில 2 உடுப்போட நிண்டா. " நே" எண்டு அவா இங்கிலீசில கேட்ட கேள்விக்கு டச்சில "இல்லை" எண்டு பொருத்தமில்லாம பதிலை சொல்லிட்டு சட்டெண்டு முன்னுக்கு திரும்பிட்டன். பொய் சொல்லேக்கையும் பொருத்தமா சொல்லணும் எண்டுவாங்க. அது பேசி வைச்ச பொய் அதைதான் பொருத்தமா சொல்லணும். இது திடீரெண்டு நினைச்சு வைக்காம சொன்ன பொய். சரி பொய் பொய் தானே இதில பிறகென்ன நியாயப்படுத்த வேண்டி இருக்கு எண்டு நெச்சன். திரும்பியே பாக்காமல் எனது நேரம் வர காசை குடுத்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு நண்பிகளோட அந்த ஆண்டி பக்கமே பாக்காம ஓடி வந்தன். என்னவோ மனசுக்க நெருடலா இருந்திச்சு. யேசுவை இராயப்பர் மூன்று முறை மறுதலித்தது ஞாபகம் வந்திச்சு. நண்பிகள் வழியில வரேக்க ஒரே நக்கல் அடிச்சாங்க. அவர்கள் தங்கள் வழியில் போக பஸ்ஸில ஏறி கறுத்து போகாம இருக்க சூரியனுக்கு எதிர் பக்கமா உள்ள சீட்டில யன்னல் ஓரமா போய் இருந்தன்.

நான் என்ன வேணுமெண்டா பொய் சொன்னன்? அந்த ஆண்டியோட அவவோட ஹஸ்பண்டும் வந்திருந்தார். அவரை எங்கயோ பிறந்த நாளில அப்பாவோட கதைக்க கண்ட ஞாபகம். இப்போ கொலிஜில பாடம் இல்லாத நேரம் சூரினாம் பிரெண்டுகளோட கடைக்கு வந்திருக்கன். இவர் கண்டு அப்பாக்கு சொன்னால் சரி, கிழிஞ்சுது. இல்லை எண்டால் " அங்க அவரோட மகள் வெளிநாட்டு பெட்டையளோட ஊர் சுத்துது" எண்டு இவர் டெலிபோனில சொல்ல. அங்கால மற்றாளுக்கு அது " பெடியங்களோட" எண்டு கேட்க..பிறகு கதை கறுப்பு கறுப்பா வாந்தி எடுத்த விசயம் காகம் காகமா வந்தி எடுத்தது எண்டு திரிபடைஞ்சது போல ஆயிடும். அந்த பயத்தில தானே கடைக்குள்ள போகேக்கையே அவையை கண்டுட்டு நெத்தியில இருந்த குட்டி பொட்டையும் எடுத்து புறங்கையில் ஒட்டிப்போட்டு அவை கண்ணில படாமல் நிண்டன். இருந்தும் கண்டுட்டாவே. சரி இல்லை எண்டு சொன்னாலும் முகம் காட்டி இருக்குமோ?? சீ..சூரினாம் ப்ரெண்டுகள்..அவையும் தமிழ் ஆக்கள் போல தானே கலர். அதனால என்னையும் அவை எண்டு நெச்சிருப்பா என்ன..?
இப்படி பல யோசனைகளோட வீடு போய் சேர்ந்தன். போனதும் முதல் வேலை அம்மாக்கு விசயத்தை சொன்னது தான். ஆனால் அம்மா
" நீ போனது பிழை தானே? சொல்லாம எப்பிடி போவா நீ?" எண்டு கேட்டா.
" அம்மா எனக்கு எத்தினை வயசு சொல்லுங்கோ. என்னை விட வயசு குறைஞ்சதுகள் எல்லாம் எவ்வளவு செய்யுதுகள். பெடியங்களோட அது இதெண்டு சுத்துதுகள். சும்மா உதில பிரெண்டுகளோட போனது பிழையே?" எண்டு நான் வாதாடினன்.
" நீ போனது பிழை இல்லை. சொல்லாம போனது தான் பிழையடி!"
"அப்பாட்ட இப்ப சொல்ல. அப்பா உடனே ஓம் எண்டுவரோ. அதோட நான் பிளான் பண்ணி போகலம்மா. பிரீ பாடம் அதுவும் 3 பாடம். எவ்ளோ நேரம் கொலிஜ்க்கயே இருக்கிறது. அதுதான் போனான். சரி இனி இப்பிடி போகல. இண்டைக்குத்தான் கடைசி!"
எண்டு வாதாட்டத்தை பெரிசாக்காமல் முடிச்சுட்டு சரி அம்மாட்ட சொல்லிட்டன் தானே எண்ட ஆறுதலோட இருந்தன்.

கொஞ்ச நாளால கொலிஜ் போகாமல் ட்றெயினிங் போகணும் எண்டிச்சினம். கொஞ்சம் தூரம் எண்டாலும் பைக்கில போறதால சந்தோசமா இருந்திச்சு. காலேல அந்த குளிர் காத்து முகத்தில் பட ஏதோ நம்மூரு ஞாபகம் வரும். அப்பிடியே நாட்கள் பிசியா போக தொடங்கிச்சு. கொலிஜ் பக்கமே போறேல்ல. எல்லாம் பார்மசியோட தான். பார்மசி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. கூட வேலை செய்யிறவையும் நல்ல மாதிரி எண்டதால சந்தோசமா போய்க்கொண்டு இருந்திச்சு. இங்க பார்மசில டச்சில தான் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறது சிலவேளை வெளிநாட்டுக்காரர் வந்து பாதி டச்சை கடிச்சு துப்பினா இங்கிலிசில கதைக்குறது. என்னோட ஆசை நம்ம தமிழில் பேசி ஹெல்ப் பண்ணணும் எண்டு. குறைஞ்சது ஒராளுக்காவது தமிழில ஹெல்ப் பண்ணணும். இதை என்னோட வேலை செய்யிறவைக்கும் சொல்லி வைச்சிருந்தேன். அவையும் உன்னோட ஆசை நிறைவேறும் கவலைப்படாத எண்டு சொல்லுவினம்.

ஒரு நாள் ஏதோ வேலையா கணணியோட மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தன். இந்த கணணி இப்பிடித்தான் எப்பவும். சரியே இல்லை. எதையும் விரைவா செய்யாது. ஆனா சனம் எல்லாத்துக்கும் அறக்க பறக்க எண்டு நிக்குங்கள். அதனால எனக்கு டென்சனும் ஆயிடும். ஆக்களின் அவசரத்துக்கு நான் வேலை செய்ய போய் மருந்தை மாத்தி குடுத்தா சரி..ஜெயில் தான்! அண்டைக்கும் அப்பிடித்தான்..டென்சனா இருக்க என்னோட வேலை செய்யிறவா வந்து சிரிச்சுக்கொண்டு நிண்டா பக்கத்தில. எனக்கு எரிச்சலா வந்திச்சு. நான் கஷ்டப்படுறன் இவாக்கென்ன இளிப்பு எண்டு.
ஆனா அவா சிரிச்சபடியே நிண்டு கொண்டு " உங்கட ஆசை நிறைவேற போகுது" எண்டு வேற சொன்னா. நான் " இருங்கோ வாறன்" எண்டு அந்த வேலையை முடிச்சிட்டு வர. " உங்கட நாட்டு ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு ஆஸ்துமா. அதுக்கு பாவிக்கிற ஸ்பிறேயை எப்பிடி பாவிக்குற எண்டு டச்சில சொல்ல விளங்கல. நீங்களே வந்து உங்கட மொழியில விளங்கப்படுத்துங்கோ" எண்டா. நமக்கு சொல்லணுமா. சந்தோசத்தில அவர் தனியா இருந்த ரூமுக்குள்ள துள்ளாத குறையா போன நான் அப்பிடியே நிண்டுட்டன். அங்க கையில ஸ்பிறேயோட நிண்டவர் அதே ஆண்டி!!!
" யேசுவே..........இப்பிடி பழி வாங்கிட்டீரே!!" எண்டு நினைச்சுக்கொண்டு நிக்க.
" உம்மட ஆசை நிறைவேற போகுது" எண்டு எனக்கு சொல்லிட்டு அந்த ஆண்டியை பார்த்து " இவா உங்கட நாடு. தங்கட மொழியில விளக்கம் கொடுக்க வேணுமெண்டு ரொம்ப நாள் ஆசை இவாக்கு" எண்டு சொல்ல எனக்கு சளார் எண்டு அடிச்சது போல இருந்திச்சு.
ஆக்கள் குறைவெண்டதால நான் எப்பிடி விளங்கப்படுத்த போறன், எங்கட மொழி எப்பிடி இருக்கும் எண்டு கேட்க முதலாளி உட்பட எல்லாரும் அமைதியா நிண்டிச்சினம். நானும் சரியெண்டு அதிர்ச்சியை மறைச்சுக்கொண்டு
" வணக்கம் ஆண்டி" எண்டு மெதுவா சிரிச்சன்.
ஆண்டியும் " வணக்கம் " எண்டா சிரிக்காமல்..
நான் வேறு கதைக்காமல் எப்படி பாவிப்பதென்று தமிழில விளங்கப்படுத்தினன்.
எப்போதும் போல விளங்கப்படுத்திய பிறகு " ஏதும் கேள்வி/ சந்தேகம் இருக்கா?" எண்டு தயக்கமா கேட்டன். ஆண்டி உடனே " அண்டைக்கு ஏன் பொய் சொன்னீர்? " எண்டு கேட்டா. ஆஸ்துமாவுக்கு பாவிக்கும் மருந்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை தான். ஆனாலும் ஆண்டியோட ஆவல் எனக்கு விளங்கிச்சு. ஆனால் என்னோட நிலமை அவாக்கு புரியுமா என்ன?
" இல்லை நான் வேணுமெண்டு சொல்லவில்லை. உங்கட அங்கிள் (அவாவின் ஹஸ்பண்டை தான் அப்படி சொன்னேன்) அப்பாவிடம் சொல்லி விடுவாரோ எண்டு தான் சொன்னேன்" எண்டு பாதி உண்மையை சொனனன்.
சொல்லி விட்டு எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி அதுக்குரிய பெட்டிக்குள் வைத்து, மீதி மருந்துகளை பார்மசி பைக்குள் போட்டு எடுத்து " இந்தாங்கோ ஆண்டி" எண்டு நீட்டினன். நான் என்ன செய்றன் எண்டு அப்பிடியே பார்த்துக்கொண்டு நிண்ட ஆண்டி நீட்டிய பையை வாங்கி விட்டு " சரி நான் யாருக்கும் சொல்லவில்லை அவரும் சொல்ல மாட்டார். நானும் உம்மட வயசை கடந்து தான் வந்தனான். நீர் பயப்பிடாதையும். இனி இதுதான் எண்ட பார்மசி. அடிக்கடி சந்திப்பன். உம்மட ஆசையும் அடிக்கடி நிறைவேறும். விளங்கப்படுத்தினதுக்கு நன்றி. அதுசரி என்னை எதுக்கு ஆண்டி எண்டுறீர்..அப்பிடி கிழவியாவா இருக்கன்? அக்கா எண்டு சொல்லும் என்ன.. சரி வாறன்" எண்டு எனக்கும் மற்றவையை பாத்து " எனக்கு விளங்கிட்டுது. பாய்" எண்டு சொல்லிட்டு போனா.

நான் என்ன செய்றது, என்ன நடந்தது எண்டு தெரியாம அவா போறதையே பார்த்துக்கொண்டு நிண்டன். கண்ணில கொஞ்சமா தண்ணி வேற. அது குற்ற உணர்வாலயும் என்னோட ஆசை நிறைவேறும் போது அதை சந்தோசமா செய்ய முடியலையே என்ற கவலையாலும் வந்த கண்ணீர். பின்னால கை தட்டுற சத்தம் கேட்டு திரும்பினன். விசயம் தெரியாமல் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு கை தட்டிச்சினம். நானும் இவ்ளோ நாளும் மனசுக்க உறுத்தின அந்த சின்ன விசயம் இண்டைக்கு இல்லாம போயிடுச்சு எண்ட சந்தோசத்தில திரும்பவும் அந்த கணணியோட மல்லு கட்ட தொடங்கினன்.

Friday 29 June 2007

ஒரு தேர் நாள்....

இரவு 8 மணி போல மாமா டெலிபோன் அடிச்சார். " என்ன மாதிரி நாளைக்கு கோயில் வாற பிளான் ஏதும்?" எண்டு கேட்க நானும் உடனே " ஓமோம்..வாறம் வாறம்" எண்டு துள்ளினன். எங்க, எத்தினை மணிக்கு சந்திக்கிறதெண்டு கதைச்சு வைச்சதும் தான் எனக்கு கவலை வந்திச்சு. " இப்ப எந்த உடுப்பு போடுறது?" முதலே தெரிஞ்சிருந்தா 4,5 நாளுக்கு முதலே ரெடியா எடுத்து வைச்சிருக்கலாம் இப்ப என்னத்த போட எண்டு இரவிரவா ஒரே யோசனையில நித்திரையும் சரியா வரேல்ல. காலேல தான் அம்மா சொன்னதை எடுத்துப்போட்டுக்கொண்டு அண்ணரோட கிளம்பிட்டன். ஊரில வல்லுபுரகோயில் தேருக்கு போகும் நினைப்பில்....


ஹை வே ஆல இறங்கினதுமே றஃபிக்! இந்த றஃபிக்கில விசேசம் என்னவெண்டால் எல்லாம் நம்ம தமிழ் ஆக்களோட வாகனங்கள் எண்டது தான். யன்னலை இறக்கி விட்டுட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலீஸ்காரன் கையை காட்டின பாதையில போய் காரையும் பார்க் பண்ணிட்டு நடக்கத்தொடங்கினன். கோயில் வர 5 நிமிஷ நடை. சரியான கூட்டம். கூட்டத்துக்க நுழைய முதலேயே அண்ணா " கையை விடப்படாது!" எண்டு அறிக்கை விட்டார். சரி எண்டு தலையை ஆட்டிப்போட்டு மாமாவையை தேட தொடங்கினம். நாங்கள் சொன்ன டைமுக்கு வராததால சொன்ன இடத்துல மாமா இல்லை. அங்கையும் இங்கையும் பார்த்துக்கொண்டு நிக்கத்தான் " பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சீலனை, யேர்மன் நாட்டிலிருந்து பிறேம் தேடுகிறார். சொன்ன இடத்தில் வந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறார்!" எண்டு அறிவித்தல் கேட்டிச்சு. அது நாங்களில்லை ஆனா மாமாக்கு இப்பிடி ஒரு அழைப்பு விடுவமா அல்லது நாளை நமதே போல ஒரு குடும்ப பாட்டு எடுத்து விடுவமா " அதுசரி அப்பிடி ஒரு பாட்டு நமக்கு இருக்கா" எண்டு தேடுற அண்ணாவையும் அலட்டி குழப்பிக்கொண்டு நிண்டன். பிறகு ஒரு மாதிரி மாமாவையை கண்டு பிடிச்சுட்டு கோயிலுக்க போய் அரிச்சனையும் பண்ணி அம்பாளை எனக்கு நல்ல புத்தி தரும்படி கும்பிட்டு வர அம்பாள் அழகா அலங்கரிச்சு தேரில ஏறி இருந்தா. எவ்ளோ நாளைக்கப்புறம் அம்பாள் தரிசனம் எண்டு நினைக்கவும் தேர் நகர அடிச்ச மேளம், நாதஸ்வர ஒலிகளிலும் ஒரு நிமிஷம் மெய் சிலிர்த்தது உண்மை தான்! என் உயரத்துக்கு தெரியாவிட்டாலும் கொஞ்சம் எட்டி எட்டி காவடி ஆடுபவர்களை பார்த்துக்கொண்டு அம்பாள் என்னை கடந்து போக நம்மூர் அம்மன் நினைவோட கும்பிட்டன்.


"தேரோட போறேல்லையா" எண்டு கேட்க

" நீ நடப்பியா அவ்ளோ தூரம் அதுவும் உந்த ஹீலோட?" எண்டு பதில் கேள்வி வந்திச்சு.

அதோட மச்சான், மச்சாளும் அவ்ளோ துரம் நடக்க மாட்டினம் எண்டிட்டு போய் கோயிலின் வலது பக்கத்துல ஒரு புல்வெளியில இருந்தன். வீட்டில இருக்கேக்குள்ள சாப்பாடு இருந்தாலும் பசிக்காது ஆனா இப்பிடி எங்காச்சும் வெளிக்கிட்டா ஏதோ 10 நாள் பட்டினி போல பசி வயித்தை கிள்ளும். சரி மாமாவை தானே சாப்பாடு எடுக்க போயிருக்கினம் எண்டு அதில இருந்த புல்லுகளிண்ட தலையை கிள்ளி அதுகளை காயப்படுத்திக்கொண்டு இருந்தன். பசியெண்டு மட்டுமில்லை போகும் போது அண்ணா
" எண்ட தங்கச்சியை கவனமா பாருங்கோ" எண்டு 12 வயசு மச்சான்கிட்ட சொல்லிட்டு போனதும் இதுதான் நேரமெண்டு மச்சான் அதால பெடியங்கள் சும்மா போனாலும் அவையையும் என்னையும் ஒருக்கால் பார்ப்பதும் எரிச்சலா இருந்திச்சு. சரி மனசை வேறு எங்கையும் விடுவம் எண்டா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த அறிவித்தல்கள் காதில விழுந்திச்சு. பிள்ளைகளை பெற்றோர் தேடும் காலம் போய் பெற்றோரை பிள்ளைகள் அழுதபடி தேடும் காலம் வந்துட்டுது. காரியாலயத்தில சின்னப்பிள்ளை ஒண்டு பெயர் கூட சரியாக சொல்லத்தெரியாமல் பெற்றோரை தேடி அழுதுகொண்டு நிற்பதாக ஒரு 4,5 தடவை அறிவிச்சாங்க. பிள்ளையின் உடையின் விவரம், கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் விவரம் சொல்லியே அறிவித்தார்கள். இப்படி அந்த முக்கால் மணி நேரத்துக்குள்ள பல குழந்தைகளின் அறிவித்தல்கள். சிலர் பெற்றோர் பெயர் சொல்ல தெரிந்தவர்கள் சிலர் தங்கள் பெயர் மட்டும் சொல்ல தெரிந்தவர்கள் எண்டு அறிவித்துக்கொண்டு இருந்தாங்க. இந்த பெற்றோர் ஏன் இப்பிடி கவலயீனமா இருக்கினம் எண்டு விளங்காம இருந்திச்சு. இதுவரைக்கும் ஒண்டோ இரண்டு தடவை தான் சங்கிலி கண்டெடுக்கப்பட்டதாக அறிவிச்சதை கேட்டன்!

மரவெள்ளிக்கிழங்கு, பூசனிக்காய், உருளைக்கிழங்கு குழம்பு, அப்பளம், பொரிச்ச மோர் மிளகாய் அத்தோட ஊறுகாயில் ஒரு சட்னி போல ஒன்று (சரியாக தெரியவில்லை) எல்லாம் சேர்த்து குழைத்த அம்பாள் அன்னதான சோற்றை சொந்தத்தோட வட்டமாக இருந்து சாப்பிடுவதில எத்தனை சந்தோசம். யாரும் மூச்சு விடல. எல்லாரும் சாப்பாட்டில பிசி. அவ்வளவு பசி. அதுவும் அந்த வெய்யிலுக்க. அங்க ஒரு பைப்பில கன பேர் கை கழுவிக்கொண்டு நிண்டாங்க. நாங்களும் கை கழுவ போக அடுத்த ரண்டாவது ஆளா நான் கழுவ லைனில நிக்க உபயகாரர் ஒருவர் அறக்க பறக்க ஓடி வந்து

" இதில கை கழுவுறேல்லை. பாருங்கோ இவ்வளவு தண்ணி ஓடி சேறா இருக்கு. உங்கட வீடெண்டா இப்பிடி செய்வியளோ?" எண்டு கோவத்தோட கேட்டதுமில்லாமல் ஒரு கையில பிள்ளையோட கையை கழுவிக்கொண்டிருந்த ஒரு அண்ணாவை பாதி கை கழுவியதோட பைப்பை திருப்பி மூடியும் விட்டார்.

" இதில் கை கழுவ கூடாது!" எண்டொரு போர்ட்டை போட்டிருக்கலாம் தானே அப்படியெண்டு நான் சத்தமா இல்லாமல் மெல்லமா மாமா காதில சொல்லிட்டு அங்கால போய் கையையும் கழுவிட்டு கடையளை பார்ப்பமெண்டு நடந்தன்.


நுழைவாயிலில் " எல்லாரும் கேளுங்கோ, ஆரும் விடு பட்டா இந்த இடத்தில தான் சந்திக்கிறது என்ன" எண்டு ஏதோ அற்றாக்குக்கு போவது போல கதைச்சுப் பேசிக்கொண்டு நுழைஞ்சம். வாசலிலேயே நல்ல வரவேற்பு " 4 சாறி 100 யூரோ" எண்டு. தொங்கின சாறியளை பார்த்தா எல்லாம் புது மொடலா இருந்திச்சு. மாமியையும் இழுத்துக்கொண்டு போனா இந்த வரவேற்பு எனக்கு மட்டுமில்லை அங்க கன பேருக்கு எண்டு மொச்சுக்கொண்டு நீண்ட கூட்டம் சொல்லிச்சு. என்னால எட்டி கூட பார்க்க முடியல. வேற கடையள் பாக்கலாம் எண்டு திரும்பினா ஒரு வித்தியாசமான புது மொடல் சாறி. இதென்ன புதுசா நான் பார்க்கலையே எண்டு அங்க இருந்த அங்கிளட்ட பெயரை கேட்டன். " சிவாஜி சாறி" எண்டார் ஸ்டைலா. "ஓ" எண்டு சொல்றதுக்குள்ள பின்னால இருந்து " அது படம் பார்த்தா மட்டும் தான் வாங்கலாம்" எண்டார் அண்ணா கறார் குரலில. " ம்ம் சாறி கொஞ்சம் கண்ணாடியா இருக்கு அதனால பிடிக்கல" எண்டு விளங்கிச்சு. சும்மா " பெயர் தானே கேட்டன்!" எண்டு சமாளிச்சன். அப்பத்தான் வீட்ட இருந்து வெளிக்கிடேக்க " பிள்ளை அது இதெண்டு ஆசைப்படுவாள் வாங்கி குடு" எண்டு அப்பா நீட்டிய காசை அண்ணா அப்பிடியே என்கிட்ட நீட்ட" வேண்டாமண்ணா ஏதும் வாங்கேக்குள்ள கேட்குறன்" எண்டு பணிவா சொன்னதும் பிழை எண்டு தோணிச்சு.

அப்பிடியே நுழையக்கூடிய கடையா பார்த்து நுழைஞ்சு, முடியாத கடையை கொஞ்சம் எட்டி நிண்டு பார்த்துட்டு இல்லை கட்டாயம் அதை ஒருக்கால் பார்க்கணும் எண்டு தோணின கடையை கொஞ்சம் இடிச்சு பிடிச்சு போய் பார்த்துட்டு " என்னடாப்பா மாமி கூட சாரி எடுத்துட்டா நானும் அம்மாக்கு சாறி எடுத்துட்டன் எனக்குத்தான் கிடைக்குதில்லையே " எண்டு சலிப்பா இருந்திச்சு. எனக்கு எங்காவது இப்பிடி போனால் அங்க ஒரு பொருள் வாங்கிடணும். அப்பத்தான் பிறகு "அட இது அங்க வாங்கினது, இது இங்க வாங்கினது" எண்டு ஒரு ஞாபகத்தோட சொல்லிக்கலாம். அதுல எனக்கு ஒரு தனி விருப்பம். அப்பிடி முதல் முதல் கோயிலுக்கு வந்திருக்கேன் ஏதும் வாங்குவம் எண்டா முடியலயே எண்டு நெச்சன். மச்சாள் கையை பிடிச்சு இழுத்துக்கிட்டே நிண்டா என்னெண்டு பார்த்தா பச்சைக்கலர் காப்பு பிடிச்சிருக்காம். உடனே வாங்கி அப்போ போட்டிருந்த பச்சைக்கலர் பஞ்சாபிக்கு போடணும் எண்டு ஆசைப்பட்டா. சரியெண்டு உள்ள போய் காப்பை அவாவோட கையுக்கு அளவு பார்த்துக்கொண்டு நிக்க பக்கத்தில ஒரு ஆண்டி " ஆ" எண்டு கத்தினா. பார்த்தா பின்னால வந்த ஆண்டி பிள்ளையை வைச்சு தள்ளிக்கொண்டு வந்த வண்டி முன் சில்லு இவாவோட காலுக்கு மேல. ஆனால் அந்த ஆண்டி வண்டியை லொக்கில விட்டுட்டு என்னவோ சீரியசா பார்த்துண்டு நிக்குறா. அந்த ஆண்டிக்கிட்ட விசயத்தை சொல்ல ஆண்டியும் லொக்கை தட்ட தட்ட அது எடுபடுதில்லை. என்ன செய்ய எண்டு நானும் பார்த்துக்கொண்டு நிண்டன். அப்பத்தான் கடைக்கார அண்ணா வந்து வண்டில் முன் பக்கத்தை தூக்கி அங்கால வைச்சார். " அட இந்த யோசனை எனக்கு வரலயே " எண்டு நெச்சன். சரி கவனம் கடையில இல்லாம அங்கால எங்கையோ போகுது எண்டு கவலைப்பட்டால் இப்பிடி நல்ல யோசனைகள் வருமோ என்னவோ..!


காப்பு அளவில்லை எண்டு கவலைப்பட்ட மச்சாளுக்கு இன்னொரு கடையில வாங்கலாம் எண்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தா உடுப்பு கடை ஒண்டு, எங்கையோ பார்த்த பெயரா இருக்கே எண்டு மாமியோட ஒரு நோட்டம் விட்டா உள்ளுக்க பிடிச்ச சாறி, பிடிச்ச கலரில என்னை பார்த்து சிரிச்சுது. அவ்ளோ தான் அந்த கடை ஆண்டிக்கிட்ட சாறியை வாங்கி பார்த்தா அந்த ஆண்டியையும் எங்கையோ பார்த்த ஞாபகம். கவனம் சாறில இருந்ததால யோசனையை விட்டுட்டு எல்லாருக்கும் சாறியை காட்டி கெட் பீஸ், போடர், நீளம் கூடவா இல்லை அப்புறம் கட்டிட்டு ரோட்டெல்லாம் கூட்டணுமா எண்டு செக் பண்ணிட்டு இருக்க அந்த ஆண்டி " தங்கச்சி, சாறி எடுக்க போறியளோ? எடுக்கல எண்ட இங்க தாங்கோ" எண்டா கடுகடுப்பான குரலில். அந்த குரலை கேட்டதும் தான் எனக்கு ஞாபகம் வந்திச்சு அவா யாரெண்டு. உடனே என் முகமும் மாறிச்சு பாருங்கோ. நானும் விடாமல் " ஓம் எடுக்கப்போறன். அப்போ வடிவா பார்க்கலாம் தானே?" எண்டு அதே தொனியில் சொல்லிவிட்டு பிறகு சாறியையும் வாங்கிகொண்டு 2 நடை வைக்கல மாம நிண்டார். ஓடி வந்து மாமாகிட்ட " மாமா அந்த ஆண்டி ஞாபகம் இருக்கா, அவேண்ட கடையில சாறி எடுக்கும் போது ரண்டு பேரும் கொஞ்சம் முறுகுப்பட்டம். சரியான டென்சன் பார்ட்டி! எப்பிடி மாமா எனக்கு எப்பவும் இவா வந்து வாய்க்குறா?" எண்டு கேட்க மாமா முகத்தில ஒரு ரியாக்சனும் இல்லை. மாமி பின்னால நிண்டு கையில நுள்ளினா. திரும்பினா அங்க மச்சானுக்கு குர்தார் காட்டிக்கொண்டு நிண்டது அந்த ஆண்டியோட ஹஸ்பண்ட்.
" ஐயோ கடவுளே!!"
மாமாக்கு அவர் நல்ல பழக்கம் எண்டதால " தான் சொல்ல முடியாததை நீ சொல்லிட்டா எண்டு சந்தோசப்படுறார்! " எண்டு மாமா நக்கலா சொல்ல அந்த அங்கிளும் சிரிச்சார். அப்பத்தான் பக்கத்தில ஒரு சீடி கடையில போன " பூங்காற்று திரும்புமா..என் பாட்டை விரும்புமா" எண்ட பாட்டில" கூ...." எண்டு புல்லாங்குழல் இசை கேட்டுச்சு. அது எனக்கா இல்லை அங்க அங்கிளுக்கா எண்டு தெரியல.


அதுக்கு மேல என்னால நடக்க முடியல. கால் அவ்ளோ நோவு. நடக்க நடக்க குதி காலில இருந்து முழங்கால் வரை நரம்பு நோகுமெண்டாலும் ஸ்டைலா ஹீல் போடோணும் தானே. நோகும் எண்டதுக்காக அதை விடவும் முடியாது.வெயில் வேற, நாக்கெல்லாம் காஞ்சு போச்சு. எல்லாரும் போய் அந்த பந்தலில வித்த சர்பத் ஒரு கப் வாங்கி குடிச்சம். எனக்கு இனிப்பு பெரிசா பிடிக்காது. ஆனாலும் வறண்ட நாக்குக்கு இதுவே பெரிசு எண்டு குடிக்க அங்கால மோர் குடுத்தாங்க. மாமாகிட்ட வாங்கி குடிச்சா. தயிருக்குள்ள சின்னதா வெங்காயம், மிளகாய் வெட்டிப்போட்டு, ஊறுகாயும் போட்டு பாதி புளிப்பு பாதி உறைப்பா நல்ல டேஸ்ட்டா இருந்திச்சு. மத்த ஒருத்தரும் வேண்டாம் எண்டு பயந்திச்சினம். எனக்கொரு கப்பும் மாமாக்கு கப்பும் போய் அந்த கூட்டத்துக்கால கஷ்டப்பட்டு வாங்கி வந்து குடிச்சன். குடிச்சதும் அங்கால றோட்டில எல்லாரும் இருந்து களைப்பாறீனம். நாங்களும் போய் இருந்தம். அப்பாடா எண்டு ஹீலை கழட்டி வைச்சுட்டு காலுக்கு கொஞ்ச நேரம் விடுதலை குடுத்துட்டு நானும் இருந்து போற வாற ஆக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன்.

பக்கத்தில ஒரு வெள்ளைக்காரி சாறி கட்டி இருக்கா இல்லை..இல்லை கட்டப் பழகி இருக்கா. அவவோட அந்த வெள்ளைக்கலருக்கு குங்கும கலர் சாறி நல்ல வடிவா இருந்திச்சு. உள் மனம் சொன்னாலும் வெளியில அதை ஒத்துக்க முடியாம அவா சாறி கஷ்டப்பட்டு கட்டியிருப்பதை நக்கல் அடிச்சுக்கொண்டு இருந்தன். கொஞ்ச நேரத்தால அவா எழும்பி போக பார்த்தா அவா இருந்தது " ஒரு பேப்பர்" மேல. "எல்லாம் நேரம்" எண்டு நான் சொல்ல மச்சான் " அவா அதை " ஒரு பேப்பர்" எண்டு நெச்சு இருந்திருப்பா" எண்டு சொல்ல சரியெண்டு பேப்பரை பிரிச்சு வாசிச்சன். பொறுமையில்லாம அங்கையும் இங்கையும் எண்டு பறந்து பறந்து தான் படிச்சன். அப்பத்தான் எங்களுக்கு தெரிந்த உறவு ஒருவரின் " மறந்த நாள்" கண்ணில பட்டிச்சு. என்னடாப்பா பிறந்த நாள் இருக்கு இதென்ன புதுசா மறந்த நாள் எண்டு நினைச்சுக்கொண்டு படிச்சன். தொடர்ச்சி எண்டு இன்னொரு பக்கத்தை காட்ட அதையும் எடுத்து வாசிக்க மச்சான் ஒரு பஞ்சு மிட்டாயை வாங்கி வந்து
" இப்ப எடுத்தா சரி பிறகு இல்லை" எண்டு வெருட்ட.
" ஏன் இவ்ளோத்தையும் நீரே சாப்பிடும் ஐடியாவோ?" எண்டு கொஞ்சம் வாயாடிட்டு படிக்க தொடங்கினா மாமா
" ஏதும் வெட்டுக்குத்து ஐடியாவோ தெரியா. வெளிக்கிடுவம்" எண்டு சொன்னார்.

பேப்பரை எடுத்து மடிச்சு பாக்குள்ள வைச்சுக்கொண்டு நடந்தன். பாக் புல் எண்டதால பேப்பர் கொஞ்சம் வெளிய விட்டு பூட்டாம ஹீலையும் போட்டுக்கொண்டு மாமாவையிடம் விடை பெற்றுக்கொண்டு நடந்தன். ஆக்கள் குறைவான இடம் எண்டால் கொஞ்சம் கெந்தி கெந்தி நடந்து கொண்டு காரை தேடி பிடிச்சு வெளிக்கிட்டம். திருப்பம் ஒண்டில அண்ணா " வலது பக்கம் போகணும் என்ன" எண்டு கேட்க " ஓமோம்" எண்டு உறுதியா சொன்னன். கொஞ்ச தூரம் போக வரும் போது பார்க்காத இடங்கள் வந்திச்சு. " பாதையை மாறி சொல்லிட்டன் வாங்கி கட்ட முதல் நானே சொல்லுறது பெட்டர் " எண்டு நினைச்சுப்போட்டு " அண்ணா இது வேற பாதை போல கிடக்கு " எண்டு மெல்ல சொன்னன். " எனக்கு அப்பவே தெரியும். திருப்புறதுக்கு ஒரு பாதை பார்த்துக்கொண்டு தான் இவ்வளவு தூரம் ஓடுறன் " எண்டார் கோவமா. அதுக்கும் வழிஞ்சு ஒருக்கால் சிரிச்சுப்போட்டு பாதை திருப்பி சரியான பாதையில போக மிச்ச கதையை வாசிப்பமெண்டு பாக்கை எடுத்தா அந்த " ஒரு பேப்பரை" காணேல்லை. கெந்தி கெந்தி நடந்ததில எங்கையோ விழுந்திட்டுது. கதையில காலேல இருந்தே ஒரே பிரச்சனை பிறகு என்ன தான் நடந்திச்சு? அந்த மறந்த நாள் தான் எது? எண்டு தலையை கொஞ்ச நேரம் பிய்ச்ச்சுப்போட்டு இனி என்ன செய்றது எண்டு வடிவா சாய்ஞ்சு கொண்டு வெளியில பார்த்துக்கொண்டு இருந்தன்.

நம்மூரில அம்மன் தேருக்கு போய் வந்ததா ஒரு உணர்வு. ஊரில தேர் எண்டா நண்பியோடு பேசி ஒரே மாதிரி சட்டை வாங்கி போட்டு கலர் காட்டுவது, கை நோக நோக தேரிழுப்பது, அங்க விக்குற கச்சான் வாங்கி அரச மரத்துக்கு கீழ இருந்து அரட்டை அடிச்சுக்கொண்டு சாப்பிடுவது எண்டு பல நினைவுகள் வெளியே என்னோடு வரும் மேகங்கள் போல கூடவே வந்து கொண்டிருந்தது..................

Saturday 9 June 2007

ஆரோக்கியமாக உடல் மெலிய...

" ஐயோ என்னடி எனக்கு உடம்பு வைச்சுக்கிட்டே போகுது? நீ மட்டும் எப்பிடி அப்பிடியே இருக்கா?"

இப்படி பல பெண்கள் தலையை பிய்ச்சுக்கிறார்கள். அதுவும் இளைய பெண்கள் அல்ல, ஒரு 30-50 வரையுள்ள பெண்கள் தான் அதிகம். அவர்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம். வேலை செய்பவர்களில் இருந்து செய்யாதவர்கள் வரை எல்லோருமே இப்படித்தான் ஒரே புலம்பல். விசேஷங்களில் கண்டால் " என்ன எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா? அதுசரி நாளும் பொழுதுமா எங்களுக்கு உடம்பு வைக்குது எப்பிடி கண்டு பிடிப்பீங்க" என்று மற்றவர்கள் சொல்லும் முதல் தங்களை தாங்களே சொல்லி சலித்துக்கொள்கிறார்கள் பல ஆன்டீக்கள். கேட்கவும், பார்க்கவும் கஷ்டமா இருக்கு.
ஆனால் எல்லோரும் அதற்காக செய்யும் மருத்துவம் தான் இன்னும் கஷ்டமா இருக்கு. மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று ஐஸ் கிறீம் சாப்பிடுறேல்லை,கொழுப்பு உணவுகள் இல்லை, காலை உணவு இல்லவே இல்லை. அதனால தேவை இல்லாத சோர்வு, மூளைக்கும் சரி உடம்புக்கும் சரி,மறதி எல்லாமே ஏற்படுகிறது. அத்தோடு தெயிலை என்று ஒன்று. அதை குடித்து உடம்பு மெலிவார்கள். சரி மெலிஞ்சுட்டுது என்று விட உடம்பு முன்னயை விட பல மடங்கு கூடும். நானும் கேட்டேன் பல பேரிடம் அது தெயிலை உண்மையாக உடல் பருமனுக்கா
என்று..ஓமோம் குடிச்சா உடம்பு நல்லா குறையும். எப்பிடி குறையுது எண்டால் கழிவுகளை வெளியேற்ற அந்த தெயிலை உதவுது எண்டுறாங்க. ஏன் அதுவே நிறைய பழம்,மரக்கறி,உடல் பயிற்சியால செய்தால் என்ன. எல்லாத்துக்குமே பஞ்சி படுறாங்க!

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியின் படி வெளிநாட்டு பெண்கள், அதாவது எம்மை போன்றவர்கள் சரியான காரணமின்றி உடல் பருமனை தங்கள் யோசனைக்கேற்ப சரியாக டயற் செய்யாமல் குறைப்பதால் பல வருத்தங்கள்,கஷ்டங்கள் உண்டாகுது என்கிறார்கள். இதுவே வெள்ளைக்காரி என்றால் சரியான டயற் புத்தகத்தோடு டயற் பண்ணி உடல் நலத்தையும் பேணி, உடலையும் மெலிய செய்கிறார். அதை ஏன் எங்க ஆண்டிக்கள் செய்யுறாங்க இல்லை?? உடல் பருமனுக்கு என்ன காரணம் என்று அறியாமலே தங்களுக்கு தங்களே மற்றவர்கள் சொல்லை கேட்டு என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்.

உடல் பருமனுக்கு எவ்ளோ காரணம் இருக்கும். அதில் சில:
- வெளியே தெரியாத வருத்தமாக இருக்கலாம் (உ+ம்=> தைரோயிட்)
- நீர் உடம்பாக இருக்கலாம்
- நீங்கள் முதலே பாவிக்கும் ஏதும் மாத்திரையின் சைட் எ•பெக்ற்றா இருக்கலாம்.
- எல்லாவற்றையும் விட உடல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம்.
அதனாலே உடல் பருமனுக்கு சரியான காரணத்தை அறிந்து கொண்டு அதற்கான

வழிகளை பின்பற்றுவது நல்லது. காரணம் அறியாமல் நம்மை நாமே வருத்தி உடலை மெலிய பண்ணுவதில் எந்த பயனும் இல்லை. மாறாக இல்லாத வேறு வருத்தங்கள் வந்து விடும். அப்பிடியே உடல் மெலியணும்னா...நல்ல டயற் முறைகளை தெரிவு செய்து உடல் நலத்தை பேணும் வகையில் செய்யணும். உடல் பயிற்சியும் என்றைக்கும் நல்லதே!!

சமீபத்தில் உடற் பருமனை குறைக்க ஒரு வழி அறிந்தேன். பழங்களாலும்,மரக்கறிகளாலும் கூடவே உடற் பயிற்சியாலும் உடற் பருமனை குறைக்கும் வழி.
உங்கள் கவனத்திற்க்கு:

மரக்கறி சூப்

இந்த மரக்கறி சூப்பின் நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடற்பருமனை
குறைப்பதே.

7 நாட்கள் தொடர்ந்து செய்யலாம் இல்லை உங்கள் வசதிக்கேற்ப 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் என்று தொடர்ந்து செய்யலாம். ஆனால் அதற்கேற்ற அளவு மரக்கறிகளை எடுத்து சூப் செய்ய வேண்டும் பல நாட்கள் சூப்பை வைத்திருந்தால் பழுதாகி விடும்.

தேவையான பொருட்கள்:
( 7 நாட்களுக்குரிய மரக்கறிகள்)


குடை மிளகாய் 2
வெங்காயம் 6
தக்காளி(அரைத்த தக்காளி சாறு) 2 ரின்
கோவா 1/2
கரட் 5
லீற்ஸ் 1
உள்ளி 4

செய்முறை

1. மரக்கறிகளை சிறிது சிறிதாக வெட்டவும்
2. பின்னர் 3 லீற்றர் தண்ணிக்குள் விட்டு அவிக்கவும்.
3. அவித்த மரக்கறிகளை தண்ணீரோடு சேர்த்து மிக்சரில் போட்டு அரைக்கவும்.
4. நன்றாக அரைத்த பின் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கவும்.
சூப்பை குடிக்கும் போது சூடாக்கி சாப்பிடலாம்.

முதலாம் நாள்:

காலை, மாலை, மதியம்:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு ஏதுமொரு பழம்.
(வாழைப்பழத்தை தவிர)

இரண்டாம் நாள்:

காலை,மாலை,மதியம்:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு அவித்து தூள், உப்பு
போட்டு உங்கள் சுவைக்கேற்ப செய்யப்பட்ட மரக்கறிகள் ஏதும் உண்ணலாம்

மூன்றாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு பழம், மரக்கறி

நான்காம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். ஒரு கிளாஸ் பால் அத்தோடு 3
வாழைப்பழம்

ஐந்தாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு 150கிராம் இறைச்சி.
உங்கள் விருப்பம் போல செய்து சாப்பிடலாம்.
உ+ம்: உப்பு, தூள் போட்டு பொரித்து (தக்காளி சாற்றோடு தொட்டு) சாப்பிடலாம்.

ஆறாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு 150கிராம் இறைச்சி
கூடவே ஏதும் மரக்கறி.

ஏழாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு சோறு, கறி.


..............

இந்த டயட் முறையோடு உடற்பயிற்சியும் செய்யலாம். முடிந்தால் மட்டுமே!! ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். களைப்பாக இருக்கும். அந் நேரத்தில் ஓரிரு நாட்கள் (விடுமுறையின் போது) செய்து பார்க்கலாம். பின்னர் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.

தாயகபறவைகள் இதழுக்காக எழுதியது. மேலும் " நலம் நாடி" குறிப்புக்களை அறிய.
http://www.thayakaparavaikal.com/nalamnadi.php

Friday 25 May 2007

படமும்...கவியும் 2



சுதந்திர காற்று..!

வீசத்தொடங்கிற்று
58 வருடங்களுக்கு முன்னால்....
ஆனாலும் நாம்
சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!!

Thursday 24 May 2007

படமும்...கவியும்..



எங்கே
பறிக்கப்படாமலே இருந்து விடுவமோ
என்றெண்ணி
பூவையவள்...
பூவானாளோ.....

இல்லை..

எங்கே
பறிக்கப்பட்டு விடுவமோ
என்றெண்ணி
பூவது...
பூவையானதோ....

............


மலர் என மறைத்தால்
கசக்கி விடுவார்களோ என பயந்து...
மணலுக்குள் மறைத்தேன்
என் காதலை....
அழித்து விடுவார் என்பதை மறந்து........

Thursday 17 May 2007

பூ மலர்ந்தது..

மலரும் வலைப்பூவாய் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களை அறியாமலே உங்கள் பலரின் வாசகியாக நான் இருந்திருக்கிறேன்! இருக்கின்றேன்! அந்த அழகான வாசனைகள், வண்ணங்கள் கொண்ட வலைப்பூக்களை பார்த்தே எனக்கும் ஒரு நப்பாசை. என்னையும் உங்கள் நந்தவனத்தில் சேர்த்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..... என்னோட முதல் ஆக்கமாக எனக்கு ரொம்ப பிடித்த மூன்று பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வாழ்க்கை என்றால் போராட்டம்! இது நான் சொல்லலை. அது எல்லோருக்குமே தெரியும். அதை போராடி தான் வெல்லணும்..இதுவும் நான் சொல்லலை. இது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்குமே புரியும் ஒன்று. ஆனாலும் சில சமயங்களில் மனம் சோர்ந்து விடுவதுண்டு. அந் நேரத்தில் நம்மை ஆதரிக்க ஒருவர் பக்கத்தில் இருந்தால் ஆறுதலாக இருக்கும். அப்படி நம்மை ஆறுதல் தரும் ஒன்று " இசை" என்றால் அது பொய்யில்லை. சந்தோசமாயினும் சரி, கவலையாயினும் சரி பிடித்த இசையை.. மனதிற்கு உற்சாகம் தரும் அல்லதும் இதம் வரும் வரிகளோடு...பிடித்த பாடகரின் குரலோடு..கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும்....!!

இப்படி எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் இவை. நீங்களும் கேட்டுப்பாருங்கள்..

படம்:அமராவதி
பாடியவர்:மின்மினி
இசை: பாலபாரதி



படம்:பூவெல்லாம் கேட்டுப்பார்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
இசை:யுவன்சங்கர்ராஜா



படம்: பம்பாய்
பாடியவர்: அனுபாமா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்